கோவையில் 1.18 கோடி கள்ளநோட்டு சிக்கிய விவகாரம் தீவிரவாதிகளுக்கு சப்ளை? தனிப்படை ஆந்திரா, கேரளா விரைந்தது
6/3/2025 2:50:56 PM
கோவை: கோவையில் ரூ 1.18 கோடி கள்ள நோட்டு தயாரித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கள்ளநோட்டு கும்பல் தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை தடாகம் ரோட்டில், மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தது. அந்த நோட்டை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்த் (31) என தெரியவந்தது.
இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒரு அறையை கம்ப்யூட்டர் புராஜக்ட் வேலை செய்வதாக கூறி 3 மாதம் முன், 2,700 ரூபாய்க்கு மாத வாடகைக்கு எடுத்து தனது கூட்டாளிகளுடன் கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரின்டர், ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனர், பேப்பர் கட்டர், இங்க் மிக்சிங் மெஷின், பைக் மற்றும் 1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதில் 5,904 இரண்டாயிரம் நோட்டுகள் இருந்தது. கள்ள நோட்டு தயாரிப்பு, வடவள்ளி மருதமலை ரோடு மகாலட்சுமி கோயில் வீதியை சேர்ந்த கிதார் முகமது(55) தலைமையில் நடந்துள்ளது. இவருடன் காரமடை நால்ரோட்டை சேர்ந்த சுந்தர் (38) என்பவரும் கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் கோவை மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் 3 ஆண்டிற்கு முன் கைது செய்யப்பட்டவர்கள். ஆனந்த் மீதும் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 3 மாதத்தில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டதாக தெரிகிறது. இவற்றை புழக்கத்தில் விட சில ஏஜெண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து பத்து சதவீதம் நல்ல ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு, 100 சதவீதம் கள்ளநோட்டு சப்ளை செய்துள்ளனர். அந்த ஏஜெண்டுகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஆனந்த் போலீசில் அளித்த வாக்குமூலம்: நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கவுண்டம்பாளையத்தில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தேன். 22 வயது முதல் பைக் திருட்டில் ஈடுபட்டேன். என் மீது ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருட்டு வழக்கில் நான் சிறையில் இருந்த போது, கிதார் முகமது, சுந்தர் இருவரும் எனக்கு பழக்கமாகினர். அவர்களிடம் எனது கஷ்டத்தை கூறி புலம்பினேன். அப்போது, அவர்கள் எங்களுடன் வந்து விடு நீ மிகப்பெரிய தொழிலதிபராக ஆகிவிடுவாய் என கூறினார்கள். நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டால் 5 ஆண்டுகளில் ஒரு வணிக வளாகம் கட்டும் அளவுக்கு நீ பெரிய கோடீஸ்வரன் ஆகிவிடுவாய் என ஆசை வார்த்தை கூறினார்கள். அப்போது, நாங்கள் கள்ளநோட்டு தயாரித்து ேகாடிக்கணக்கில் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளோம் என்றனர்.
எங்களுக்கு கள்ளநோட்டு தயாரிக்க இடம் மட்டும் ஏற்பாடு செய்து கொடு. மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர். இதையடுத்து நாங்கள் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு கிதார் முகமது, சுந்தர் இருவரும் என்னை பார்க்க சர்வீஸ் சென்டருக்கு வந்தனர். நான் குடியிருக்கும் பகுதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரூ.2700 வாடகையில் அறை பிடித்து கொடுத்தேன். இதையடுத்து கடந்த 3 மாதமாக இரவில் கள்ளநோட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். அதை 1 நல்ல நோட்டுக்கு 5 கள்ள நோட்டு என்று ஏஜெண்டுகள் மூலமாக புழக்கத்தில் விட்டோம். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பலர் வந்து எங்களிடம் கள்ளநோட்டுகளை பெற்று செல்வார்கள்.
தற்போது, கடந்த வாரம் கேரளாவில் இருந்து ரூ.1 கோடி கள்ளநோட்டு கேட்டு ஆர்டர் வந்தது. அதை தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக மும்முரமாக ஈடுபட்டோம். பெரிய பணக்காரன் ஆகும் ஆசையில் இந்த வேலையில் ஈடுபட்டேன். அதற்குள் போலீசில் சிக்கி கொண்டேன். இவ்வாறு ஆனந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கள்ள நோட்டு தயாரித்ததாக வழக்கு பதிவு செய்து (இந்திய தண்டனை சட்டம் 449, 489 ஏ முதல் டி வரை ) ஆனந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதால் கள்ளநோட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே கள்ளநோட்டு கும்பலில் முக்கிய குற்றவாளிகளான கிதார் முகமது, சுந்தர் ஆகியோரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சுந்தர் அடிக்கடி ஆனைகட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கி அங்கு பலரை ரகசியமாக சந்தித்து பணம் பரிமாற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் கள்ளநோட்டுகளை பெற்று சென்றதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.