ஆந்திராவில் 50 கோடி சொத்து குவித்த பில் கலெக்டர் கைது
6/1/2025 3:22:00 PM
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த பில் கலெக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். பில் கலெக்டராக இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இதன் காரணமாக கருணை அடிப்படையில் மாதவுக்கு வாரிசு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2016-ல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூரில் மாதவிற்கு சம்பந்தப்பட்ட 7 இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது நிலம், பிளாட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முத்ரபோயினா மாதவை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.