தூத்துக்குடி போராட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் யார் என்பதை ரஜினி தெரிவிக்க வேண்டும்: புதுவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி
5/31/2018 4:22:19 PM
புதுச்சேரி: தூத்துக்குடி போராட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் யார் என்பதை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழாவினையொட்டி அவர் எம்எல்ஏவாக இருந்து வரும் திருவாரூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விழா பேரூரையாற்றுகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார்.
இதில் கலந்துகொள்வதற்காக மு.க.ஸ்டாலின், இன்று காலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து கார் மூலம் திருவாரூர் புறப்பட்டார். வழியில் புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி காலை உணவை முடித்துக்கொண்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ‘’தூத்துக்குடிக்கு நேற்று சென்று வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியது பற்றி கேட்டனர். அதற்கு மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இது அவரது சொந்த கருத்தா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஒருவேளை பாஜக அல்லது அதிமுகவின் குரலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
எது எப்படி இருந்தாலும் அவர் சூப்பர் ஸ்டார், எனவே தான் தீவிரவாதிகள் எனக்கு தெரியும் என்று அவரே சொல்லி உள்ளார். ஆகவே தீவிரவாதிகள் யார் என்பதை அவரே நாட்டிற்கு அடையாளம் காட்ட வேண்டும். அதுவே நல்லதாக அமையும். அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவைகளுக்கு போராட்டம் நடத்தி தான் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதும் ரஜினிக்கு தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்டு சென்றார்.