கோடை விடுமுறை முடிந்தது தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு
5/31/2018 4:20:14 PM
திருச்சி: தமிழகத்தில் பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. அதன் பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒன்று முதல் 5 வரையான வகுப்புகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போல ஏப்ரல் 3வது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் 41 நாட்கள் கோடை விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து எல்லா பள்ளிகளும் நாளை திறக்கப்படவுள்ளன. எல்லாவித பள்ளிகளும் ஜூன் 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுளளது. பள்ளி திறப்பு நாளிலேயே மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.