தயிர் சாதத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு வலைவீச்சு
5/31/2018 4:13:54 PM
காரைக்கால்: தயிர் சாதத்தில் மயங்க மருந்து கலந்துகொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் கருக்களாச்சேரியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். அப்பகுதியில் உள்ள சுபைதா நகரை சேர்ந்த கவிதாஸ்(41) மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு இளம்பெண் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை கவிதாஸ் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் பெண்ணிடம் வாங்கிய ரூ.50 ஆயிரத்தை திருப்பி கேட்டால் உன்னை பலாத்காரம் செய்த விஷயத்தை கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சில வாரத்துக்கு முன் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்பினார். அப்போது நடந்த சம்பவத்தை கணவரிடம் கூறி அந்த பெண் அழுதுள்ளார். இதுகுறித்து பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின்படி, விசாரணை நடத்தும்படி காரைக்கால் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விசாரணை நடத்தி கவிதாஸ் மீது பலாத்காரம் செய்தல், ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.