கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருவாரூரில் நாளை பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு
5/31/2018 4:00:39 PM
திருவாரூர்: திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளையொட்டி நாளை மாலை ஐந்து மணிக்கு திருவாரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார்.
திக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா சற்குணம், விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், பெருந் தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதனிடையே இன்று மாலை 5 மணியளவில் திருவாரூர் அம்மையப்பனில் உள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த 2 விழாக்களிலும் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து கார் மூலம் திருவாரூர் புறப்பட்டார்.
வழியில் புதுச்சேரியில் காலை உணவை முடித்துக்கொண்டு, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக மதியம் திருவாரூர் வருகிறார். மாவட்ட எல்லையான குமாரமங்கலத்தில் அவருக்கு, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி வீதியில் உள்ள இல்லத்துக்கு சென்று தங்குகிறார். மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வருகையை முன்னிட்டு திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள், வரவேற்பு பதாகைகள் நகரம் முழுவதும் கட்டப்பட்டுள்ளன.