செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 11 ஆயிரம் பேர் கைது
5/25/2018 3:08:07 PM
திருமலை: ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் ஆயுதப்படை காவல் நிலையத்தில் துணை முதல்வர் சின்னராஜப்பா நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் தனிப்பிரிவு ஐஜி கந்தாராவ் கூறுகையில், செம்மரக்கடத்தலை தடுக்க இதுவரை 11 முறை நடந்த என்கவுன்டரில் 32 பேர் இறந்துள்ளனர். மேலும், 30 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் 11 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இதைத்தொடர்ந்து செம்மரத்தை காப்பதற்கான உறுதிமொழியை துணை முதல்வர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து நிருபர்களிடம் துணை முதல்வர் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேவஸ்தான அதிகாரிகளை, முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைத்து பேசியுள்ளார். முறைகேடுகள் நடைபெறாத நிலையில் எந்தவித விசாரணையும் தேவையற்றது. வேண்டும் என்றே முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மாநில அரசின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற உண்மையற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது’ என்றார்.