காங்கிரஸ் எம்பி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
5/25/2018 3:00:17 PM
புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, காங்கிரஸ் எம்பி சசி தரூர் மீதான விசாரணையை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ல், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு விசாரணை, டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. சுனந்தா புஷ்கர் வீட்டில், பணியாற்றி வந்த நாராயண் சிங், முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு மேல் நடந்த விசாரணையில், சுனந்தாவின் மரணம், தற்கொலையால் நிகழ்ந்தது என, குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டனர். அவரை தற்கொலைக்கு துாண்டிய குற்றத்திற்காகவும், மனைவியை துன்புறுத்தியதற்காகவும், சசி தரூர், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கை, டெல்லி நீதிமன்ற நீதிபதி, தர்மேந்திரா சிங் விசாரித்து வந்தார். குற்றம் சாட்டப்பட்டவர், எம்.பி.யாக இருப்பதால், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு, வரும், 28ல், கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட், சமர் விஷால் முன்னிலையில், விசாரணைக்கு வருகிறது. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணை விரைவில் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, சசி தரூருக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சசிதரூரின் எம்பி பதவி வரும் 2019 மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.