காங்கிரஸ்-மஜத கூட்டணியின் பலத்தை நிரூபிக்க கர்நாடக சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
5/25/2018 2:57:22 PM
பெங்களூரு: காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக பரமேஷ்வரும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். இவ்விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட நாட்டின் பல மாநிலங்களில் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய அரசு பதவியேற்ற 15 நாட்களுக்குள் சட்டபேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று குமாரசாமிக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று பேரவை கூட்டத்தை கூட்டி, தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து குமாரசாமி பேசுகிறார். அதை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மஜத-காங்கிரஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெறும். இந்த வாக்கெடுப்பை புறக்கணிக்க பாஜ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வார்கள் என தெரிகிறது. சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், பேரவையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறி்த்து தந்தையிடம் ஆலோசனை பெற பத்மநாபநகரில் உள்ள தேவகவுடா வீட்டிற்கு குமாரசாமி சென்று சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, தேவனஹள்ளி ரெசார்ட்டில் தங்கியுள்ள மஜத எம்எல்ஏகளை அழைத்துவரும்படி அவரது மூத்த சகோதரரும் எம்எல்ஏவுமான ரேவண்ணாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதை தொடர்ந்து மஜத எம்எல்ஏக்கள் ரெசார்ட்டில் இருந்து புறப்பட்டனர். பெங்களூரு இந்திரா நகரி–்ல் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில துணைமுதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் காலை ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து அவர்களும் தனி பஸ்சில் விதான் சவுதா புறபட்டனர். கர்நாடக சட்டபேரவை பகல் 12.15 மணி்க்கு கூடுகிறது. முதலில் சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. மஜத-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ரமேஷ்குமாரும், பாஜ சார்பில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியில் உள்ளனர். சபாநாயகர் தேர்வு குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுகிறது. சபாநாயகர் தேர்தல் முடிந்து புதியதாக தேர்ந்தெடு–்க்கும் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர்த்தியபின், முதல்வர் குமாரசாமி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செயகிறார். அதன் மீது விவாதம் நடந்த பின், வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவும் குரல் அல்லது உறுப்பினர்கள் கை தூக்கி ஆதரவு அளிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்த சட்டபேரவை செயலாளர் மூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.