பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் படுக்கை அறையில் படுகொலை
5/24/2018 3:36:56 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி கண்டன்குளத்தி பகுதியை சேர்ந்தவர் லைஜோ (38). இவரது மனைவி சவுமியா (33). இருவரும் கொச்சியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உண்டு. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வழக்கம்போல் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் மகன் எழுந்து பார்த்த போது வேறு அறையில் படுத்திருந்தான். உடனே படுக்கையில் இருந்து எழுந்து பெற்றோரிடம் செல்ல கதவை திறக்க முயன்றான். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. பல முறை கத்தியும் யாரும் கதவை திறக்க முன் வரவில்லை.மதியம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்து போன் மூலம் தனது பாட்டி வீட்டிற்கு தகவல் தெரிவித்தான். இதையடுத்து சவுமியாவின் பெற்றோர் விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து சாலக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். முதலில் சிறுவன் இருந்த அறையை திறந்து அவனை மீட்டனர். பின்னர் லைஜோ தம்பதி இருந்த அறையை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சவுமியா படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். லைஜோ வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக போலீசார் அவரை மீட்டனர். தொடர்ந்து திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சவுமியா உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நீண்ட நாட்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் லைஜோ மனைவி, மகனும் தூங்க சென்றுள்ளார். அப்போது கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லைஜோ மகனை வேறு அறையில் படுக்க வைத்துள்ளார். பின்னர் மனைவி சவுமியாவை வெட்டி படுகொலை செய்துவிட்டு தன்னை தானே வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் லைஜோ சகஜ நிலைக்கு திரும்பிய பிறகே முழு விவரமும் தெரியவரும். இருப்பினும் போலீசார் இந்த கொலை தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.