திருமலையில் இலவச தரிசன டிக்கெட் கவுன்டர்கள் மூடல்: இணை செயல் அலுவலர் தகவல்
5/23/2018 3:04:03 PM
திருமலை: திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியதாவது: கோடை விடுமுறை காரணமாக ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொண்டு வருபவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு 72 மணி நேரம் அவகாசம் வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வைகுண்டம் வழியாக இலவச தரிசனத்தில் வருபவர்கள் 50 மணி நேரம் கழித்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 43 ஆயிரம் பேர் என்று இதுவரை 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் இந்த டிக்கெட் பெற்றுள்ளனர். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 91 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 24 சதவீதம் பக்தர்கள் டிக்கெட்டுகள் பெற்றிருந்தாலும் பல்வேறு காரணங்களால் இதை பயன்படுத்தவில்லை. பக்தர்கள் வருகை குறையும் வரை திருமலையில் உள்ள நேரம் ஒதுக்கீடு திட்டத்துக்கான இலவச தரிசன டிக்கெட் கவுன்டர்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. ஆனால் திருப்பதியில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள் வழக்கம்போல் செயல்படும். எந்த டிக்கெட்டும் பெறாத பக்தர்கள் லேபாட்சி சந்திப்பு அருகே உள்ள வரிசை வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர தயாராக உள்ளனர். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.