திருத்தணியில் ரயில்கள் தாமதம் மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்
5/23/2018 2:55:24 PM
திருத்தணி: அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு தினமும் காலை நேரத்தில் அனைத்து மின்சார ரயில்களும் மிக தாமதமாக வந்து செல்வதை கண்டித்து இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருத்தணியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருத்தணி, ஆர்கே.பேட்டை, பள்ளிப்பட்டு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் திருவள்ளூர், சென்னை, பெரும்புதூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.இவர்கள் நாள்தோறும் திருத்தணியில் இருந்து காலை 6.30 மணியளவில் கிளம்பும் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அந்த ரயிலை பிடித்தால்தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியும்.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை நேரத்தில் வரும் மின்சார ரயில்கள் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாகவே வந்து செல்கின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து திருத்தணி ரயில்வே அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், ரயில்வே அதிகாரிகளின் அடாவடி போக்கை கண்டித்து, சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மின்சார ரயிலை, இன்று காலை 7 மணியளவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
இதுகுறித்து அங்கிருந்த ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டபோது, அவர்கள் தமிழ் மொழி தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ‘மொழி தெரியாமல் இங்கு எதற்கு வேலைக்கு வந்தீங்க?’ என சரமாரி கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், திருத்தணி தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், கிராம நிர்வாக அலுவலர் அருணாசலம் மற்றும் ரயில்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் ‘அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சிக்னல் கோளாறால் ரயில்களின் வருகை தாமதமாகிறது’ என ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
‘அதெப்படி நாள்தோறும் சிக்னல் கோளாறாகும்?’ என பயணிகள் கேட்டதற்கு ரயில்வே அதிகாரிகளால் பதில் கூறமுடியவில்லை. சுமார் ஒரு மணி நேர வாக்குவாதத்துக்கு பிறகு, சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்த மின்சார ரயிலை கிளம்பி செல்வதற்கு பயணிகள் அனுமதித்தனர். இதனால் அங்கு வந்த பாண்டிச்சேரி செல்லும் மின்சார ரயில் சுமார் 2 மணி நேர தாமதமாக புறப்பட்டு சென்றது. இதற்கிடையே அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரசாக், ரயில்வே அதிகாரிகள் மனோகரன், எத்திராஜ் ஆகியோர் பயணிகளிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ‘இனி வருங்காலங்களில் சீரான முறையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்’ என உறுதி கூறியதன்பேரில், பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.