கள்ளக்காதலால் விபரீதம்: மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது
5/23/2018 2:54:36 PM
செங்கல்பட்டு: கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை அடித்துக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32), இருவரும் பெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்நிலையில், மோனிகா வேலை முடிந்து வீட்டுக்கு தாமதமாக வருவாராம். நேற்று முன்தினமும் தாமதமாக வந்ததை யுவராஜ் தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த மோனிகா, துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் பாலூர் எஸ்ஐ லட்சுமி, விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில், தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, யுவராஜிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் மோனிகாவை கொலை செய்தாக யுவராஜ் கூறினார். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்:எனக்கும் மோனிகாவுக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இருவரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த ஜூன் 2ம் தேதி எங்களது மகளுக்கு காது குத்த வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக சென்னை தி.நகருக்கு சென்று துணிகள் எடுத்து விட்டு வரலாம் என்று மோனிகாவிடம் கூறினேன். அதற்கு அவர், சோகண்டியில் வசிக்கும் எனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு மதியத்துக்கு பிறகு செல்லலாம் என்றார். நானும் சம்மதித்தேன். இதையடுத்து அவர் கூறியபடி அவரது அம்மா வீட்டுக்கு மோனிகா சென்றார். மதியம் 3 மணியாகிவும் திரும்பவில்லை. உடனே, மாமியாருக்கு போன் செய்தேன். அப்போது, ‘மோனிகா வரவில்லை’ என்று மாமியார் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்தேன். 3.30 மணிக்கு மேல் மோனிகா வீட்டுக்கு வந்தார். அவரிடம், ‘எங்கு சென்றாய்’ என்று கேட்டேன். மழுப்பலான பதிலை சொன்னார். நானும் விட்டு விட்டேன். மதியம் சாப்பிடவில்லை. இரவாகியது. 8 மணியளவில், மீண்டும் எங்கு சென்றாய் என்று மோனிகாவிடம் கேட்டேன். அப்போதும் சரியாக பதில் சொல்லவில்லை.
ஏற்கனவே வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாக எனக்கு தெரியவந்தது. அதனால், 6 மாதங்களாக மோனிகாவை வேலைக்கு அனுப்பவில்லை. அதற்கு பிறகும் வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பதாக அறிந்தேன். அதுபற்றி கேட்டபோது, தகராறு வலுத்தது. எந்தவித பதிலும் சொல்லாததால் ஆத்திரத்தில், கட்டையால் மோனிகாவின் தலையில் தாக்கினேன். அவர் மயங்கி விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். உடனே, ஒரு புடவையை கழுத்தில் கட்டி, தற்கொலை செய்து கொண்டது போன்று மின்விசிறியில் தொங்க விட முயன்றேன். உடலை தூக்க முடியவில்லை. இதையடுத்து, புடவை அறுத்து விட்டு தந்தையை அழைத்தேன். அவரும் ஓடி வந்தார். அவரிடம், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புடவையை அறுத்து கீழே இறக்கினேன்’ என்று கூறி நம்ப வைத்ேதன். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து யுவராஜை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.