கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே லாரி ஏற்றி வட்டாட்சியரை கொல்ல முயற்சி
5/23/2018 2:54:35 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அச்சாலை வழியாக நாள்தோறும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.இம்மணல் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் எஸ்பி சிபிசக்ரவர்த்தி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதையும் மீறி, கும்மிடிப்பூண்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் மணல் கடத்தி வரப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராஜகோபாலுக்கு தொடர்ந்து ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சிப்காட் மேம்பாலம் அருகே வட்டாட்சியர் ராஜகோபால் மற்றும் உதவியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த லாரியை வட்டாட்சியர் மடக்கி சோதனை செய்தார். அந்த மணல் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருட்டுத்தனமாக கடத்தி வரப்படுவது தெரியவந்தது. பின்னர் அந்த லாரியை சிப்காட் காவல் நிலையத்துக்கு எடுத்து வருமாறு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்துவிடம் கூறி, அவருடன் லாரியில் வருமாறு தனது உதவியாளரையும் அனுப்பினார்.
அப்போது அந்த லாரியின் உரிமையாளர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், மேலப்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் ரெட்டி, லாரி டிரைவரை கீேழ இறக்கிவிட்டு, அந்த லாரியை சிப்காட் காவல் நிலையத்துக்கு செல்வது போல், மீண்டும் ஆந்திராவை நோக்கி லாரியை வேகமாக ஓட்டினார்.அந்த லாரியை பின்தொடர்ந்து ராஜகோபால் ஜீப்பில் விரட்டி சென்று பிடிக்க முயன்றார். பெத்திக்குப்பம் டோல்கேட் அருகே லாரியை மடக்கியபோது, ராஜகோபாலின் மீது லாரியை ஏற்றி தினேஷ் ரெட்டி கொல்ல முயன்றார். ராஜகோபால் வந்த ஜீப் டிரைவர் சாமர்த்தியமாக சாலையோரமாக சென்று நிறுத்திவிட்டார். இதனால் ராஜகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில், லாரியில் சென்ற வட்டாட்சியரின் உதவியாளரை சூலூர்பேட்டை அருகே லாரியிலிருந்து இறக்கிவிட்டு, தனது லாரியை தினேஷ் ரெட்டி ஆந்திராவுக்கு வேகமாக ஓட்டி தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி ராஜனிடம் வட்டாட்சியர் ராஜகோபால் புகார் அளித்தார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆந்திராவுக்கு தப்பிய தினேஷ் ரெட்டியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.