800 அரசு பள்ளிகள் மூடப்படுவது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
5/23/2018 2:52:55 PM
சென்னை: தமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுவது எப்போது என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியடைந்தவர்கள் சோர்ந்து விட வேண்டாம். அவர்களுக்கு கவுன்சிலிங் தருவதற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதில், அவர்களுக்கு சில வழிமுறைகள் கூறப்படும். மேலும், தோல்வியடைந்த மாணவர்கள் தேர்வு எழுத ஜூன் 28ம் தேதி மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் சோர்வடையாமல் அதைப் பயன்படுத்தி கொண்டு தேர்வு எழுத வேண்டும். தனியார் பள்ளிகள் இன்னும் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றன. இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை குறைப்பதற்கு மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. அதைப்போல் 890 பள்ளிகளில் 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளனர். எனவே, இந்த எண்ணிக்கை உயர்த்த ஆசிரியர்களிடம் கூறி பெற்றோர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள சலுகைகள் குறித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் பெற்றோர்கள், மாணவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூற வேண்டும். தற்போது அரசு பள்ளிகளை மூடும் முடிவு இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் பிழைகள் இருந்தது. தற்போது, வெளியிடப்படும் புத்தகத்தில் எந்த பிழைகளும் இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை பார்த்து சிபிஎஸ்இ பள்ளிகளே வியந்து போய் உள்ளன. அதைப்போல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.