தமிழகத்தை அதிமுக அரசு சூறையாடுகிறது: ஜெ. தீபா
5/22/2018 3:30:41 PM
மணப்பாறை: தமிழகத்தை அதிமுக அரசு சூறையாடி வருகிறது என்று, மணப்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெ.தீபா பேசினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை அருகே நேற்று இரவு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு தீபா பேசியதாவது: கபட நாடகம் நடத்தி, தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றி தமிழகத்தை இந்த அரசு சூறையாடி வருகிறது. இந்த அரசை தட்டி கேட்கவேண்டும். தமிழகத்தில் தற்போது நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் இந்த அரசு தான் காரணம். எத்தனை போராட்டம் நடத்தினாலும் தமிழகத்தில் பலன் கிடைக்காது. இந்த அரசை தூக்கி எறிந்து விட்டு தேர்தல் நடந்து புதிய அரசு அமைந்தால் தான் தமிழகத்தில் போராட்டம் ஓயும்.
நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகம் எல்லா வளமும் பெற்ற தலை சிறந்த மாநிலமாக உருவாகும். அந்த மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம். இவ்வாறு தீபா பேசினார். முன்னதாக அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மழை செய்தது. இதனால் உடனடியாக தனது பேச்சை 15 நிமிடத்தில் முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.