ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலம்
5/22/2018 3:25:08 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோயிலின் 4ம் பிரகாரமான ஆழிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் உள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார். மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டிருக்கும்.
இந்தாண்டு வசந்த உற்சவம் நேற்று மாலை தொடங்கியது. வசந்த உற்சவம் வரும் 29ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் காட்சியளிப்பார்.
நேற்றிரவு வழக்கம்போல் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் வசந்த மண்டபத்துக்கு புறப்பாடு நடந்தது. இதையொட்டி வசந்த மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேற்று நீர் நிரப்பப்பட்டது. அந்த மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நம்பெருமாள் புறப்பாடு துவங்கியதும் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நம்பெருமாளை வசந்த மண்டபத்துக்கு கொண்டு செல்லாமல் கருட மண்டபத்தில் வைத்தனர். இதனால் அங்கேயே பக்தர்கள் நம்பெருமாளை தரிசித்தனர். 7ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருள்கிறார். 9ம் திருநாளில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் காண்கிறார்.