பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
5/22/2018 3:24:25 PM
பெரம்பூர்: வியாசர்பாடியில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மற்றொரு ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூர் அடுத்த வியாசர்பாடி பி.வி.காலனி 1வது தெருவை சேர்ந்தவர் மோகன் (35). இவர் மீது வழிப்பறி, அடித்தடி உள்ளிட்ட பல்வேறு வழக்கு எம்கேபி நகர், பெரம்பூர் ஆகிய காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவர், நேற்று இரவு வியாசர்பாடி எம்பிஎம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுனில் (24) என்பவருக்கும், மோகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுனில் வெளியில் வந்துவிட்டார். பின்னர், தனது நண்பர்களை அங்கு வரவழைத்து டாஸ்மாக் கடைக்கு வெளியில் சுனில் காத்திருந்தார்.
மது அருந்திவிட்டு வெளியில் வந்த மோகனை சுனிலும் அவரது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்தும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மோகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மோகனுக்கும், சுனிலுக்கும் மாமூல் வாங்குவதில் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. தப்பிய சுனில் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர். ரவுடியை அரிவாளால் கும்பல் வெட்டிய சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.