பரமக்குடியில் துணிகரம் பெண் டாக்டரை கட்டிப் போட்டு 41 பவுன் நகை கொள்ளை
5/21/2018 3:39:02 PM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (62). மருத்துவ இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (61). பரமக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் சென்னையில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். பாலச்சந்திரன்-கிருஷ்ணவேணி தம்பதி வீட்டில் கிளினிக் நடத்தி வருகின்றனர். மகனை பார்ப்பதற்காக பாலச்சந்திரன் நேற்று சென்னை சென்றார். வீட்டில் கிருஷ்ணவேணி மட்டும் தனியாக இருந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில், இவரது வீட்டின் கதவை சிலர் தட்டியுள்ளனர். நோயாளிகள் என நினைத்து, கிருஷ்ணவேணி கதவை திறந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து, அவரை உள்ளே தள்ளி கதவை பூட்டியது. சத்தமிட்டால் கொலை செய்து விடுவோம் என கத்தியை காட்டி அவரை மிரட்டியுள்ளனர். பீரோ சாவியை தருமாறு கூறி, கிருஷ்ணவேணியை அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 41 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். கிருஷ்ணவேணியின் கை, கால்களை கட்டிப் போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இன்று காலை அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணவேணியின் முனகல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
கட்டுகளை அவிழ்த்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராமநாதபுரத்திருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண் டாக்டரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே இலந்தைகுளம், கருங்குளத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் தூங்கி கொண்டிருந்த 2 பேரிடம் 14 பவுன் நகையை கொள்ளையைர்கள் பறித்து சென்றனர். பரமக்குடியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.