பிளஸ் 2 தேர்வு முடிவு திருவள்ளூரில் 87.17 சதவீதம் காஞ்சிபுரத்தில் 87.21 சதவீதம்
5/16/2018 3:47:39 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 334 பள்ளிகளில் இருந்து 43,886 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 38,255 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.17 சதவீத தேர்ச்சியாகும்.இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 90 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 16,340 மாணவர்களில் 11,944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 73.10 சதவீதமாகும். 192 மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு எழுதிய 20,199 மாணவர்களில் 19,646 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.26 சதவீதமாகும்.28 சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 3087 மாணவர்களில் 2871 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93 சதவீதம். அரசு நிதியுதவி பெறும் 13 பள்ளிகளில் தேர்வு எழுதிய 3,672 மாணவர்களில் 3,399 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.57 சதவீதம். இவ்வாறு மாவட்டத்தில் 334 பள்ளிகளில் தேர்வெழுதிய 43,886 மாணவர்களில் 38,255 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 87.17 சதவீதம் பெற்று 31வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நீண்ட விடுமுறையில் செல்வதாகவும், இதனால், அரசு பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதில்லை. எனவே, பயோ மெட்ரிக் முறையை அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாவட்டத்தில் 22,220 மாணவர்கள், 25,241 மாணவிகள் என மொத்தம் 47,461 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 119 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது.தேர்வு எழுதியவர்களில் 18,362 மாணவர்கள், 23,027 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீத தேர்ச்சியாகும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 350 பள்ளிகளில் 111 பள்ளிகள் அரசு பள்ளிகள் ஆகும். இந்த அரசு பள்ளிகளில் 19,171 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 66.67 சதவீத மாணவர்களும், 84.31 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 24வது இடத்தை இந்த மாவட்டம் பிடித்துள்ளது.