கர்நாடக தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் திருப்பம்: பாபா ராம்தேவ் கணிப்பு
5/15/2018 3:02:09 PM
புதுடெல்லி: கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. மதசார்பற்ற ஜனதா தளத்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 2 ெதாகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 112 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என கணித்துள்ளன. கர்நாடகாவை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு தேர்தல் வரவுள்ளது. இதன்பின்னர் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில சட்டமன்றத்துக்கு தேர்தல் வரவிருக்கிறது. இதனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும். இந்த தேர்தலில் பாஜ நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.