‘கும்பிட்டு கேட்டும் எனது தாயை அடித்து கொன்று விட்டார்களே’ : மகன் கதறல்
5/11/2025 4:53:39 PM
போளூர்: சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(51), ருக்மணி(65). மயிலாப்பூர் கஜேந்திரன்(55), உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார்(34), சந்திரசேகர். இவர்கள் 5 பேரும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் வந்தனர். அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக ஏற்பட்ட வதந்தியால் கிராம மக்கள் ஒன்று திரண்டு இவர்களை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் ருக்மணி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக தம்புக்கொட்டான்பாறை, கலியம், திண்டிவன், அத்திமூர், கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், வேட்டகொள்ளைமேடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 25பேர் கைது செய்யப்பட்டு போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 200 பேரை தேடி வருகின்றனர். இதனால் இந்த கிராமங்களில் உள்ள வீடுகள், கடைகள் அனைத்தும் இன்று 2வதுநாளாக பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் ருக்மணியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை 5.30 மணியளவில் அவரது மகன் கோபிநாத் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கோபிநாத் (42) கூறியதாவது:எனது தாய் மற்றும் உறவினர்களை பட்டப்பகலில் ஊரே ஒன்று கூடி காட்டுமிராண்டிகளை போல் தாக்கியுள்ளார்கள். போலீசார்வந்தபிறகும் தாக்குதல் நடந்துள்ளது. அடி தாங்க முடியாமல் துடித்த வயதான என் தாய் மற்றும் உறவினர்கள், நடந்த சம்பவத்தை கூறியும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கையெடுத்து கும்பிட்டும் காலில் விழுந்தும் கேட்டபோதும் இரக்கமின்றி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் என் தாய் இறந்துவிட்டார். இவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கையை போலீசார் எடுத்து தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை ஆணையத்தில் நீதி கேட்போம் என்று கூறி கதறி அழுதார்.
நகை, பணம் கொள்ளை
முன்னதாக கோபிநாத் நேற்று மாலை 4 மணிக்கு போளூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் புகார் அளித்தார்.
அதில், ‘எனது தாயார் ருக்மணி வளையல், செயின், மோதிரம் உட்பட 30 சவரன் நகை அணிந்திருந்தார். மலேசியாவை சேர்ந்த கஜேந்திரன், மோகன்குமார் ஆகியோர் 10 சவரன் நகையும், ₹3.50 லட்சம் ரொக்கப்பணமும் வைத்திருந்தனர். அவை தற்போது காணாமல் போயுள்ளது. அதை மீட்டுத்தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.