செய்யாறு அருகே இன்று அதிகாலை குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய வாலிபர் கைது
5/11/2025 4:52:27 PM
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னையை சேர்ந்த மூதாட்டி ருக்மணி அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த 4பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நேற்றுமுன்தினம் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பொதுமக்கள் சிலர் தாக்கினர். இதில் அந்த நபர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது சடலத்தை அங்குள்ள ஏரி பாலத்தில் தொங்கவிட்டனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வதந்தி பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அதுபற்றிய விவரம்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது புரிசை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் (29). கட்டிட மேஸ்திரி. இவர் தனது வாட்ஸ்அப்பில் கடந்த 3 நாட்களுக்கு முன் குழந்தை கடத்தல் சம்பந்தமாக வதந்தி பரப்பியுள்ளார். அதில் பதிவான தகவல்கள்:
ஐஸ் விற்பவர்கள் போல் வடமாநில கும்பல் ஊடுருவியுள்ளது. இவர்கள் ஐஸ் விற்பது போல் வந்து குழந்தைகளை ஐஸ் பெட்டிக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். இதுவரை 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது. எப்போதும் வேலை வேலை என்று இருக்காமல் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வீரராகவனை இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் வேறு யாருக்கெல்லாம் இந்த தகவலை தெரிவித்துள்ளார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டிஎஸ்பி கூறுகையில், குழந்தை கடத்தப்படுவதாக போன் மூலமும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வதந்தி பரப்பினால் பாரபட்சமின்றி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்கவும். யாரையும் தாக்கக்கூடாது என்றார்.