கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் : எஸ்ஆர்எம்யூ அறிவிப்பு
5/11/2025 4:51:50 PM
திருச்சி: ஏழாவது சம்பள கமிஷன், தேசிய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலைக் கைவிடுதல், காலியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தவிர்த்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு சங்கத்தினர் அந்தந்த கோட்ட அலுவலகங்கள் முன் நடத்தினர்.திருச்சி பொன்மலை பணிமனை மற்றும் திருச்சி ஒருங்கிணைந்த எஸ்ஆர்எம்யூ கிளை சார்பில் ஜங்ஷனில் கோட்ட மேலாளர் அலுவலகம் முன் உண்ணாவிரத போரா ட்டம் கடந்த 8ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கியது. எஸ்ஆர்எம்யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன், கோட்ட தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை 6 மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைந்தது. அப்போது வீரசேகரன் அளித்த பேட்டி: எஸ்ஆர்எம்யூ தொழிலாளர்களின் கோரிக்கைகளை ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிறைவேற்ற காலம் தாழ்த்தியதால், இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் வரும் 16, 17ம் தேதிகளில் பொது மகா சபை கூட்டம் நடக்கிறது. இதில் எஸ்ஆர்எம்யூ பொது செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்க உள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வேலைநிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.