தஞ்சை, திருவாரூரில் குவிக்கப்பட்ட மத்திய அதிரடிப்படை திடீர் வாபஸ்
4/30/2018 5:29:11 PM
திருச்சி: தமிழகத்தில் கோவையை தலையிடமாக ெகாண்டு மத்திய அதிவிரைவு படை செயல்படுகிறது. இந்த படையினர் ஆண்டுக்கு ஒரு முறை தமிழகத்தில் முக்கியமான பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு நடத்துவார்கள். முக்கிய பகுதிகளில் பெரிய அளவில் பிரச்னைகள், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் அது தொடர்பான மீட்பு பணிகளை செய்யவும், கலவரம் ஏற்பட்டால் அவற்றை ஒடுக்கவும், இந்த ஆய்வு உதவும் என்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன்திட்டம், புதிதாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய அரசு ஏற்படுத்த போகும் பெட்ரோலிய மண்டலம் ஆகிய பிரச்னைகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த திட்டங்களை கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து தினந்தோறும் டெல்டாவில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோலிய மண்டலத்தை கண்டித்து விவசாயிகள், டெல்டா மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக மத்திய அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அதிக அளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருப்பதாக நேற்று செய்தி பரவியது.
2 அதிகாரிகள் தலைமையில் வந்திருக்கும் இவர்கள் பல மண்டபங்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழக போலீசின் கவனத்துக்கு வராமலேயே இந்த போலீசார் வந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, மத்திய போலீஸ் எதற்காக வந்திருக்கிறார்கள் என தெரியாது, தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவழைக்கவில்லை என கூறினர். இதுகுறித்து மத்திய உளவுத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிலான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளன.
இந்த நேரத்தில் கட்டாயம் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே தமிழக போலீசாரின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருக்காமல் மத்திய போலீஸ் படை பாதுகாப்பும் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால்தான் மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்’என்றார். இந்நிலையில் நேற்று திடீரென மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முகாமிட்டிருந்த மத்திய போலீஸ் இன்று அதிகாலை திருச்சி வழியாக கோவை புறப்பட்டு சென்றனர்.
தமிழக அரசு தங்கள் அதிருப்தியைமத்திய அரசுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் திரும்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. வழக்கமாக முகாமை விட்டு வெளியே வரும் மத்திய படையினர், கல்லணை, பெரியகோயில், தாராசுரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கும் ஆய்வு செய்யாமலேயே திரும்பி விட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.