பேராசிரியர் முருகன் வீட்டில் சிபிசிஐடி சோதனை: விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் சந்தானம் குழு
4/28/2018 5:14:04 PM
அருப்புக்கோட்டை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மதுரையில் நேற்றும், நேற்று முன்தினமும் விசாரணை மேற்கொண்ட சந்தானம் குழுவினர், அது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். நேற்று பேராசிரியர் முருகன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்து பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி கல்லூரிக்கு சென்ற சந்தானம், மாணவிகள் உள்பட 20 பேரிடம் விசாரணை நடத்தினார்.
இரண்டாம் கட்ட விசாரணைக்காக சந்தானம் குழுவினர் நேற்று காலை 9.45 மணிக்கு தேவாங்கர் கலைக் கல்லூரிக்கு வந்தனர். 9.50 மணிக்கு விசாரணையை தொடங்கி, மதியம் 1.30 மணி வரை 4 மாணவிகள், 2 பேராசிரியைகள், 2 பேராசிரியர்கள் என 8 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மதியம் முதல்வர் பாண்டியராஜன், செயலாளர் ராமசாமியிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. அப்போது ஆடியோ வெளியானது எப்படி? சஸ்பெண்ட் செய்யப்பட்டது, மாணவிகளிடம் நிர்மலாதேவி நடந்து கொண்ட விதம் குறித்து சந்தானம் குழு விசாரித்ததாக தெரிகிறது. மதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் நேற்று அருப்புக்கோட்டை கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியில் இன்று சந்தானம் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை சர்க்யூட் ஹவுசில் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் இந்த அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராசிரியை விவகாரம் தொடர்பாக இன்று பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என்று சந்தானம் அறிவித்துள்ளார். இருப்பினும் இன்று மதியம் வரை பொதுமக்கள் யாரும் மனு கொடுக்க வரவில்லை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்திய பின்னரே, கவர்னரிடம் தங்கள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக சந்தானம் நேற்றே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகனிடம் 3ம் நாளாக நேற்று விசாரணை நடந்தது. பல்கலை. ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடமும் விசாரணை நடந்தது. நேற்று மதுரையை சேர்ந்த பிரபல லாட்ஜ் உரிமையாளர்கள் உட்பட 6 பேர் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்று காலை 9 மணியளவில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கினர்.
முருகன் வீட்டில் சோதனை: மதுரை ஒத்தக்கடை சொர்ணமீனாள் நகரில் உள்ள முருகனின் வீட்டில் நேற்று மதியம் சிபிசிஐடி போலீசார் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். அங்கு முருகனின் மனைவி சுஜாவிடம், ஒத்தக்கடை விஏஓ முருகன் முன்னிலையில் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முருகனின் சகோதரி சுவிகா கூறுகையில், ‘‘உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை காப்பாற்றவே, எனது சகோதரர் முருகன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இதில், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் தெரிய வரும்’’ என்றார்.