நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தொல்லை? ரேணுகா சவுத்ரிக்கு சிவசேனா கண்டனம்
4/28/2018 5:12:23 PM
மும்பை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ரேணுகா சவுத்ரி சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், பாலியல் ரீதியாகப் பெண்கள் திரைத்துறையில் மட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் கடும் கண்டனமும் , கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சவுத்ரி நாடாளுமன்றத்திலும் பெண்கள் பாலியல்ரீதியாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மிகவும் பொறுப்பற்றதாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த பெண்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
ரேணுகா சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்தார், மத்திய அமைச்சராகவும் இருந்தார். அப்போதெல்லாம் அவருக்குப் பெண்கள் நாடாளுமன்றத்தில் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவில்லையா. அவரின் மாநிலங்களவை எம்.பி.பதவிக்காலம் முடிந்தபின்புதான் இது குறித்து அவர் பேசவேண்டுமா. இப்போதுதான் இது குறித்து அவரின் நினைவுக்கு வந்ததா. பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டது நாடாளுமன்றத்திலும் நடந்திருக்கிறது என்றால், ரேணுகா சவுத்ரி ஏன் அந்தச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஒரு பெண்ணின் கண் முன்னே, பெண்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்படும்போது ஏன் அமைதியாக இருந்தார்.
ரேணுகா சவுத்ரி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானது என்றால், அதுகுறித்து அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களை பாலியல் ரீதியாகச் சுரண்டும் செயல் நடந்திருப்பது உண்மை என்றால் எப்போதிருந்து எனக் கண்டறிய வேண்டும். மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.