கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேவகவுடா தயவில்லாமல் அடுத்த அரசு அமையாது: கருத்து கணிப்புகள் தகவல்
4/28/2018 5:11:11 PM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ல் நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜ தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூருவில் குடியேறி, தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். கர்நாடகாவை பொறுத்தவரை கடற்கரை பகுதி, மும்பை கர்நாடகா, மத்திய கர்நாடகா, ஐதராபாத் கர்நாடகா, பழைய மைசூரு என ஐந்து முக்கிய பகுதிகளாக உள்ளன. இந்த ஐந்து பகுதிகளிலும் கடந்த பல தேர்தல்களிலும் மக்கள் வாக்களிக்கும் விதம் வெவ்வேறாக உள்ளது. மும்பை கர்நாடகா மற்றும் கடற்கரை பகுதி கர்நாடகாவில் பாஜ வலுவுடன் உள்ளது.
அதே சமயம் மத்திய கர்நாடகாவிலும், ஹைதராபாத் கர்நாடகாவிலும் பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் வலிமையுடன் உள்ளது. இந்த நான்கு பகுதிகளிலும், காங்கிரஸூக்கும், பாஜவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆனால் பழைய மைசூரு பகுதியில் நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. அங்கு பாஜ களத்தில் இல்லை. காங்கிரஸூக்கும், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும் போட்டி நிலவி வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு வரும் கருத்து கணிப்புகளிலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலை இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. காங்கிரஸூக்கு ஒரு சில தொகுதிகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வேறு சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும் பழைய மைசூரு பகுதியில் காங்கிரசுக்கும் கிடைக்கப்போகும் இடங்களை பொறுத்தே ஆட்சியமைப்பது யார்? என்பது முடிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பாஜவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்து, பெரும்பான்மை கிடைக்காமல் போனால், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி ஆதரவு தரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தேவகவுடா தயவில்லாமல் அடுத்த அரசு அமையாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.