சென்னையை சேர்ந்தவர்களிடம் 40 லட்சம் மோசடி: கும்பல் கைது: சொகுசு கார்கள், பணம் பறிமுதல்
4/27/2018 2:53:33 PM
திண்டிவனம்: சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர்கள் பிரபு (34), ஜானகிராமன் (35). இருவரும் சென்னை கந்தன்சாவடியில் செல்போன் கடை வைத்துள்ளனர். இவர்களிடம் நான்கு மாதத்திற்கு முன் ஒரு கும்பல் தங்களிடம் இரண்டு கிலோ எடையுள்ள தங்ககாசு புதையல் உள்ளதாகவும், அதை குறைந்த விலையில தருவதாகவும் கூறி தங்ககாசு மாதிரியை கொடுத்தனர். தங்ககாசை சோதனை செய்து பார்த்ததில் சுத்த தங்கம் என தெரியவந்தது. பின்னர் ரூ.40 லட்சம் ரூபாய்க்கு இரண்டு கிலோ தங்க காசுகளை தருவதாக அந்த கும்பல் ஆசை காட்டியது. இதற்கு பிரபு, ஜானகிராமன் சம்மதித்தனர்.
இதை தொடர்ந்து 18.3.2025 அன்று மயிலத்தில் இரண்டு கிலோ தங்க காசுகள் தருவதாகவும், ரூ. 40 லட்சம் பணத்துடன் அங்கு வருமாறும் பிரபு, ஜானகிராமனிடம் அந்த கும்பல் கூறியது.
அதன்படி இருவரும் ரூ. 40 லட்சம் பணத்துடன் மயிலத்திற்கு வந்தனர். மயிலம் அருகே கள்ளகுளத்தூர் ரோட்டில் பணத்துடன் காத்திருந்தனர்.
அப்போது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு காரில் அங்கு வந்தனர் அவர்கள் ஒரு செம்பு குடுவையை பிரபுவிடம் கொடுத்து அதில் தங்ககாசுகள் இருப்பதாக கூறினார்கள். அதை பெற்று கொண்டு பிரபுவும், ஜானகிராமனும் ரூ. 40 லட்சம் பணத்தை கொடுத்தனர். அதேநேரத்தில் அங்கு ஒரு காரில் போலீசார் போல வந்த சிலர் இவர்களை பார்த்து கஞ்சா விற்கிறீர்களா என பிரபு மற்றும் ஜானகிராமனை மிரட்டி உள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த ரூ. 40 லட்சம் பணம் மற்றும் தங்ககாசுகள் அடங்கிய செம்பு குடுவை ஆகியவற்றை பறித்து கொண்டு அவர்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இதைப்பார்த்ததும் தங்க காசு விற்க வந்த கும்பலும் காரில் தப்பி விட்டது.
மோசடி கும்பலிடம் பணத்தை பறிகொடுத்த பிரபு, மயிலம் போலீசில் புகார் செய்தார். தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 23ம்தேதி விழுப்புரத்தை சேர்ந்த மோசடி கும்பல் தலைவன் தர்மலிங்கம் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தம்பி ராமகிருஷ்ணன் (60) மற்றும் அருள்முருகன் (30), மணிகண்டன் (35) ஆகியோர் தங்ககாசு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 25 லட்சத்து 51 ஆயிரம் மற்றும் இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய ரகுராமன் தர்மலிங்கம், செந்தில் ஆகியோர் வேறு வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் போலீஸ் வேடத்தில் வந்த ஐந்து பேர் தலைறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.