கேகேஆருடன் இன்று மோதல் புதிய கேப்டனுடன் களம் இறங்கும் டெல்லி வெற்றிபாதைக்கு திரும்புமா?
4/27/2018 2:50:27 PM
புதுடெல்லி: ஐபிஎல் டி.20 தொடரில் டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 26வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. டெல்லி அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் மட்டுமே (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ரிஷப் பன்ட், மேக்ஸ்வெல், ஜேசன்ராய், கம்பீர், ஸ்ரேயாஸ் அய்யர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தும் தொடர் தோல்விகளை கண்டு வருகிறது.
மோசமான தோல்விகளுக்கு பொறுப்பேற்று கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அவரது தலைமையில் இன்று டெல்லி களம் இறங்குகிறது. இதனால் வெற்றிபாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் எஞ்சிய 8 போட்டியில் 7ல் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
மறுபுறம் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 6 போட்டியில் தலா 3ல் வெற்றி, 3ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
பேட்டிங் சிறப்பாக இருந்த போதும் பந்து வீச்சு சொதப்பலாக உள்ளது. இன்று வெற்றி பெற்று புள்ளிகணக்கை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடும். இதுவரை இரு அணிகளும் 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 13ல் கொல்கத்தாவும், 7ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.