ராகுல் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு: விசாரணை நடத்த காங். கோரிக்கை
4/27/2018 2:36:52 PM
மைசூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், முக்கிய எதிர்கட்சியான பா.ஜ. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வட கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ராகுல் காந்தி உள்பட அனைவரும் பத்திரமாக இறங்கினர். சிறிது நேரத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.