ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஆயுள் தண்டனை ரத்து: உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
4/27/2018 2:34:12 PM
ராஞ்சி: கொலை வழக்கில் இருந்து ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரனை விடுதலை செய்து டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான சிபு சோரனின் உதவியாளர் சசிநாத் ஜா, கடந்த 1994-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சிபு சோரன் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு, சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மற்ற 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து சிபுசோரன் உள்ளிட்ட 5 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தான். இதனை விசாரித்த ஐகோர்ட் சிபு சோரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் ஜாவின் உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் பெஞ்ச், சிபு சோரனை விடுவித்த டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.