தினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு?
4/26/2018 2:45:41 PM
திருச்சி: டிடிவி.தினகரன் அணியில் உள்ள 9 எம்எல்ஏக்கள் திவாகரனை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை எதிர்த்து இந்த 9 பேரும் செயல்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சிக்கு சசிகலாவே பொதுச்செயலாளராக இருக்கிறார். ஆனால், சசிகலா குடும்பத்தில் வேறு யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சசிகலாவின் குடும்பத்தில் சண்டை விஸ்வரூபம் எடுக்க ெதாடங்கி உள்ளது.
தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ‘‘எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் திவாகரன், ஜெய் ஆனந்த் செயல்படுகின்றனர். 21 எம்எல்ஏக்களும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தலைமையை ஏற்று தான் செயல்பட்டு வருகிறோம்’’ என்று அறிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் மாலை தஞ்சையில் காவிரிக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய டிடிவி.தினகரன் பேசும்போது, “எனக்கு உறவு என்பது வேறு. கட்சி என்பது வேறு, யாராக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன். யாருக்கும் பயப்பட்டு, பின்வாங்க மாட்டேன். யாரிடமும் மண்டியிட மாட்டேன்’’ என திவாகரன் மீது மேலும் தாக்குதல் நடத்தினார். திவாகரன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி மன்னை நகரில் உள்ள நல்லதங்காள் கோயில் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறும்போது,
தினகரன் தொடங்கி உள்ள கட்சி அவரது குடும்ப நலனுக்காக தொடங்கப்பட்டது. தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் செயல்படுவோம். சசிகலா கூறினாலும் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டோம் என்றார். தினகரன், திவாகரன் மோதலுக்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது இருதரப்பு நிர்வாகிகளும் கூறியதாவது: ஜெயலலிதா இறந்த நாள் முதலே அதிமுகவின் அதிகார மையத்தை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு முதலில் முயற்சித்தவர் திவாகரன். ஓபிஎஸ் நீக்கத்திற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுந்த போது சசிகலாவிடம் தன்னை முதல்வராக அறிவிக்க சொல்லி அழுத்தம் கொடுத்தவர் திவாகரன். அதை சசிகலா ஏற்கவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தினகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதை ஆரம்பம் முதலே திவாகரன் ரசிக்கவில்லை. அமமுகவை தினகரன் ஆரம்பித்த போதே அதனை தடுப்பதற்கு திவாகரன் பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அக்கட்சியில் தனது மகன் ஜெயானந்துக்கு மாநில அளவில் பதவியை தருமாறு தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதை தினகரன் ஏற்காததால் அவருக்கு, செக் வைக்க நினைத்த திவாகரன் தனது மகன் ஜெயானந்த் மூலம் போஸ் மக்கள் பணியகம் என்கிற புதிய ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதன் மூலம் தனது மகனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இதனை தினகரன் ரசிக்கவில்லை. இப்படி தொடர்ந்து பல விஷயங்களில் திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். நடராஜனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தஞ்சைக்கு வந்தார். அப்போதே அவரிடம், திவாகரன், தினகரன் இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தினகரனின் வளர்ச்சியை விரும்பாத பிஜேபியின் அதிகார மையத்தில் இருந்து சமீபத்தில் சில தகவல்கள் முதல்வர் எடப்பாடியிடம் கூறப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. ஒரு வேளை அத்தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வந்தால் உங்கள் ஆட்சிக்கு பிரச்னை வரும்.
அதனால் தினகரனை சமாளிக்க திவாகரனை வழிக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ்சிடம் எடப்பாடி ஆலோசனை செய்துள்ளார். ஓபிஎஸ் திவாகரனை வளைக்கும் முயற்சியை விரும்பவில்லை. இதனால் தனியாகவே சில வேலைகளை எடப்பாடி ஆரம்பித்தார். முதல் கட்டமாக திவாகரனுக்கு நெருக்கமாக உள்ள மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தை சேர்ந்த தேசபந்த், சசிகலாவின் சித்தப்பா கோட்டூர் டாக்டர் கருணாகரனின் மருமகன் கோவை ராவணன் ஆகிய இருவரையும் அழைத்து திவாகரனிடம் தூது அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி மன்னை நகரில் திவாகரனுக்கு சொந்தமாக இருக்கும் மற்றொரு வீட்டில் திவாகரனை தேசபந்துவும், ராவணனும் சந்தித்துள்ளனர். அங்கு 4 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.
தினகரன் வசம் உள்ள எம்எல்ஏக்களில் உங்களது ஆதரவாளர்களை எடப்பாடி அணியில் சேர்ப்பதற்கு நீங்கள் (திவாகரன்) முயற்சி எடுக்க வேண்டும். ஒரு வேளை சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் உங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு பிரதிபலனாக கட்சியின் அதிகார மையம் திவாகரன் வசமும், ஆட்சி அதிகார மையம் எடப்பாடி பழனிச்சாமியிடமும் இருக்கும். அதற்கு ஓபிஎஸ் ஒத்துவரவில்லை என்றால் அவரையும் கழட்டி விடுவதற்கு எடப்பாடி தயாராக இருப்பதாகவும் திவாகரனிடம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு புறம் தினகரன் தன்னை மதிக்காததால் கோபத்தில் இருந்த திவாகரன், எடப்பாடியின் தூதுவர்களிடம் யோசித்து சொல்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார்.
தற்போது தினகரன் வசம் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உள்பட 21 எம்எல்ஏக்களில் 9 பேர் திவாகரன் ஆதரவாளர்கள் தான். இதில் அறந்தாங்கி ரத்தினசபாபதியும் ஒருவர். இந்த 9 பேரும், திவாகரன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வார்கள். இவ்வாறு இருதரப்பு நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் தினகரன் - திவாகரன் மோதல் காரணமாக சசிகலாவின் குடும்ப ரகசியங்கள் பல வெளிவரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் சசிகலா ஆதரவு யாருக்கு என்பது தெரியாமல், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தநிலையில், திடீர் திருப்பமாக இளவரசி மகன் விவேக்கும் - ஜெய் ஆனந்தும் இணைந்துள்ளனர். இது இந்த மோதல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
9 எம்எல்ஏக்கள் நான் சொல்வதை கேட்பார்கள்: திவாகரன் பேட்டி
மன்னார்குடி அருகில் உள்ள சுந்தரக்கோட்டையில் திவாகரன் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக உடைந்ததற்கு தினகரனே காரணம். மிக விரைவில் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளேன். இன்னும் 6 மாதங்களில் தினகரன் தனிமரமாக இருப்பார். என்னை கண்டு தினகரன் பயப்படுகிறார்.
தினகரனின் சூழ்ச்சி வலையில் சசிகலா சிக்கி தவிக்கிறார். குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் தினகரன் வெற்றி வேலை விட்டு என்னை ஆழம் பார்க்கிறார். தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்களில் 9 பேர் எனக்கு வேண்டியவர்கள். தேவைப்படும்போது அவர்கள் நான் சொல்வதை கேட்பார்கள் என்றார்.
கோபத்தில் சசிகலா
திவாகரனின் மகள் ராஜ் மாதங்கிக்கு மதுரையில் நாளை வளைகாப்பு நடக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும், நாளைமறுநாள் பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து, தினகரனின் மோதல் போக்கு குறித்து எடுத்துக்கூற திவாகரன் திட்டமிட்டுள்ளார். அதேபோல் தினகரனும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளார். இருவரில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மீது சசிகலா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பதவி ஆசைக்காக குடும்ப சண்டையை தினகரனும், திவாகரனும் வீதிக்கு கொண்டு வந்து விட்டதாக சசிகலா கருதுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.