மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
4/26/2018 2:44:17 PM
மதுரை: மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில், கைதான பேராசிரியை ஒரு கருவி தான். ஆளுநர் உள்ளிட்ட பல துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது ஆளும் அதிமுக, தன்னை ஒரு அரசு என்று சொல்லும் அருகதையை இழந்து விட்டது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தொடர்ந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, மத்திய மாநில அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்.
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளார். இதில் கவர்னர், கவர்னர் அலுவலக அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் என பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவர்னரே, விசாரணை நடத்த அதிகாரியை உத்தரவிட்டுள்ள வினோதம் நடந்து வருகிறது.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு, அது தொடர்பான விசாரணையை நடத்த அதிகாரம் இல்லை. எனவே அவர் நியமித்த விசாரணை அதிகாரியையும், சிபிசிஐடி விசாரணை யையும் ரத்து செய்து, உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.