தாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்
4/26/2018 2:42:07 PM
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் உலக பிரசித்திபெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. உலக பாரம்பரிய சின்னமான இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோயிலை சுற்றிலும் பல ஏக்கர் பரப்பில் புல் தரை உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு அமர்ந்து இருப்பர். நேற்று இரவு 11 மணி அளவில் இங்கு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும், 5 வாலிபர்களும் வந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் போதையில் இருந்தனர். இவர்கள் விடிய விடிய போதையில் ஒழுக்க கேடான ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அனைவரும் அங்கேயே மயங்கி சாய்ந்தனர்.
விடிந்ததும் உடன் வந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர். அந்த பெண்ணால் எழுந்திருக்க முடியவில்லை. போதையில் குப்புற படுத்திருந்தார். உடைகள் அலங்கோலமாக கிடந்தது. கோயில் துப்புரவு பணியாளர்கள் வந்து இந்த கோலத்தை கண்டு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பெண்களை அழைத்து அந்த பெண்ணின் உடைகளை சீர் செய்தனர். அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. தாலுகா போலீசார் வந்து விசாரித்தபோது அந்த பெண் கும்பகோணத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.