ராகுல் காந்தியின் செல்வாக்கால் கர்நாடகாவில் காங். வெற்றி பெறும்: மாஜி மத்திய அமைச்சர் நம்பிக்கை
4/26/2018 2:39:33 PM
திருமலை: ராகுல்காந்தி செல்வாக்கால் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே இன்று திருப்பதியில் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.கோயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது திருப்தி அளிக்கிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புதிதாக உருவாகிய ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அதை மறுத்து வருகிறது. அதனை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு போராடி வருவது பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்ற கடந்த 6 மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் செல்வாக்கு பெருகி. கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.