பேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு
4/26/2018 2:38:33 PM
கோவை: கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. பணம் வாங்கிக்கொண்டு தகுதியில்லாத நபர்களுக்கு பணியிடம் ஒதுக்கியதும், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களிடம் லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4 மாதங்களாக பல்கலைக்கழகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் பேராசிரியர் ஞானசேகரன், ஒருவரிடம் பணம் வாங்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பணத்தை பெற்றுக்கொண்ட ஞானசேகரன், துணை வேந்தரிடம் சேர்த்துவிடுவேன் என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே துணை வேந்தராக இருந்த கணபதி லஞ்சம் பெற பலரை ஏஜென்டாக நியமித்தது தெரியவந்த நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் பேராசிரியர் ஞானசேகரனிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த நிலையில் வீடியோ காட்சிகள் வெளியானது தொடர்பாக ஞானசேகரன் கன்வீனர் கமிட்டியினரிடம் ஒரு விளக்க கடிதம் நேற்று வழங்கினார். அதில் தான் லஞ்சம் வாங்கவில்லை எனவும், சிலர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் ெதரிவித்திருந்தார்.
வீடியோ காட்சி ெவளியானதை ெதாடர்ந்து பல்கலை சார்பில் உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் முழுவிவரத்தையும் அனுப்ப உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி தமிழ்துறைத்தலைவர் குறித்து ஊடகம் மற்றும் பத்திரிகைககளில் வெளியான செய்திகள் அனைத்தும் சி.டியில் பதிவேற்றம் செய்து உயர்கல்வித்துறை செயலருக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. இதனுடன் பல்கலையின் விளக்கமும், தமிழ்த்துறை தலைவரின் கடிதமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் துணைவேந்தர் குழு கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவாலிடம் இதுதொடர்பாக பல்கலை அதிகாரிகள் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.