மதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்
4/26/2018 2:36:23 PM
மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலைக்கு இன்று காலை சென்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவினர், மாணவிகளை பாலியலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியிடம் அதிரடியாக விசாரணையை துவக்கினர். சந்தானம் குழுவினரிடம் பல்வேறு புதிய தகவல்களை நிர்மலாதேவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செக்ஸ் குற்றச்சாட்டில் தொடர்புடைய பெரிய தலைகள் கலக்கத்தில் உள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் மற்றும் பல்கலை உயரதிகாரிகளுக்காக மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மற்றொருபுறம் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணைக்கு நிர்மலாதேவி சரிவர ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 5 நாட்கள் விசாரணைக்கு பின்னர், நேற்று நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கவர்னரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், கடந்த 19ம் தேதி மதுரை வந்து, தனது முதல் கட்ட விசாரணையை துவக்கினார்.
மதுரை சர்க்யூட் ஹவுசில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். மேலும் தனக்கு உதவியாக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு முதன்மையர் கமலி, மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை தலைவர் பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோரும் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்தார். கடந்த ஏப்.20ம் தேதி காலை அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரிக்கு சென்று சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தினர். நிர்மலாதேவியுடன் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், கல்லூரியின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம் சந்தானம் தலைமையிலான இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
பேராசிரியை நிர்மலாதேவி, தங்களையும் பாலியல் தொழிலுக்கு அழைத்தார் என்று கல்லூரியை சேர்ந்த மேலும் 6 மாணவிகள், சந்தானம் குழுவினரிடம் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தனர். மேலும் சுயநிதி பிரிவில் பணியாற்றி வரும் இளம் பேராசிரியைகள் சிலரையும், நிர்மலாதேவி பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார் என்ற தகவல்களும் இந்த விசாரணையில் வெளியாகின. கடந்த 21ம் தேதி பல்கலைக்கழகம் சென்ற சந்தானம், அங்கு புத்தாக்க பயிற்சிக்காக நிர்மலாதேவி வந்து சென்றதற்கான ஆவணங்களை சேகரித்தார். மேலும் பல்கலை. அதிகாரிகள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட 14 பேரிடம் விசாரணை நடத்தினார். அத்துடன் தனது முதல் கட்ட விசாரணையை அவர் முடித்துக் கொண்டார்.
பின்னர் 2ம் கட்ட விசாரணைக்காக நேற்று காலை மீண்டும் மதுரை வந்த அவர், மதியம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், பேராசிரியை ஜெனிபா, உடற்கல்வித்துறை இயக்குநர் ஜெகவீரபாண்டியன், புத்தாக்க பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் அலுவலக கண்காணிப்பாளர்கள் பால்பாண்டி, முத்துப்பாண்டி உள்பட பலர் மனுக்கள் வழங்கினர். நேற்றைய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்தது.
நிர்மலாதேவியிடம் விசாரணை
இந்நிலையில் இன்று காலை 9.20 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், அவரது உதவியாளர்கள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பேராசிரியை கமலி, மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை தலைவர் பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்றனர். முன்னதாக அவர்கள் மதுரை சரக மத்திய சிறைத்துறை டிஐஜி பழனியிடம், பேராசிரியை நிர்மலாதேவியை சிறையில் சந்தித்து பேசவும், அவரிடம் விசாரணை நடத்தவும் முறையாக அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தலாம் என அனுமதியளித்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவிட்டுள்ளார்.
‘காலை 9.30 மணி முதல் பேராசிரியை நிர்மலாதேவியிடம், ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான மூவர் குழுவினர் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்து, சந்தானம் குழுவினரை நிர்மலாதேவி ‘தெறிக்க விட்டுள்ளதாக’ கூறப்படுகிறது. இதனால் இந்த செக்ஸ் குற்றச்சாட்டில் தொடர்புடைய பெரிய தலைகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
‘சிபிசிஐடி விசாரணை’ குறித்து விசாரணை
நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்து நேற்று மாலைதான், மதுரை சிறைச்சாலைக்கு நிர்மலாதேவி வந்தார். இன்று சந்தானம் குழுவினர் சிறைச்சாலையில் நிர்மலாதேவியிடம் நடத்திய விசாரணையில், ‘சிபிசிஐடி விசாரணையில் அவர் என்ன கூறினார், இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என அவர் யார், யாரை கை காட்டியுள்ளார் என்பதை முதலில் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்’ என்று கூறப்படுகிறது.