வங்கி பெண் ஊழியர் கொலை 4 ஆண்டுக்கு பின் வாலிபர் கைது: ஆசைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்
4/25/2018 4:48:12 PM
கரூர்: கரூரில் நடந்த வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், வளையங்காடு பகுதி சித்தன் நகரை சேர்ந்த ரவி மகள் ரூபா(24). கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார். கரூர் காந்திபுரம் நடுத்தெருவில் பெண் ஆடிட்டர் ஒருவரது வீட்டின் மாடியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். ரூபா தங்கியிருந்த வீட்டின் தரைத்தளத்தில் பெண் ஆடிட்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. முதல் தளத்தில் வீட்டின் உரிமையாளரும், ஆடிட்டரின் கணவரான மாதவன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதற்கு மேல் இருந்த தளத்தில் ரூபா வசித்து வந்தார்.
2014 ஏப்ரல் 4ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அறையில் இருந்து வெளிப்பகுதி வளாகத்தில் ரூபா பிணமாக கிடந்தார். கொடூரமாக கொலை செய்யப்பட்ட அவரது உடலை கரூர் டவுன் போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடக்க காலத்தில் சிலரை பிடித்து விசாரித்தனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.கொலையாளி குறித்த தடயம் எதுவும் சிக்காததால் அப்போது வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவர் தங்கியிருந்த வீட்டில் ஆடிட்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் இருந்ததால் குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை.காலப்போக்கில் இந்த வழக்கு கிடப்பில் இருந்தது.
இந்த நிலையில் ரூபா கொலை வழக்கில் கொலையாளியை கைது செய்ய கடந்த சில மாதங்கள் முன்பு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்.பி. ராஜசேகரன் ஒரு தனிப்படை அமைத்தார். கரூர் டவுன் டிஎஸ்பி கும்மராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருத்விராஜ், செந்தில்குமார், சந்திரசேகர், செந்தில்குமரன், எஸ்.ஐகள் ராஜேஸ்வரி, அழகுராமு, கணேசன், மணிவண்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ரூபா கொலை வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். வீட்டிற்குள் நுழைந்து ரூபாவை கொலை செய்த நபர் அவருக்கு நன்கு தெரிந்த நபராக இருக்க வேண்டும் எனவும், வீட்டை பற்றி தெரிந்த நபராக இருக்கலாம் எனவும் கருதி விசாரணையை தொடங்கினர்.
இதில் பெண் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்த வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரியப்பன்(25) ரூபாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து ரூபா பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர்.
கைதான மாரியப்பன் போலீசாரிடம் தெரிவிதத வாக்குமூலம் : நான் ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன். அப்போது எங்களது உரிமையாளர் வீட்டின் மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு ரூபா குடிவந்தார். அவரது அழகில் மயங்கி, அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று நான் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து ரூபாவின் அறைக்கு இரவில் சென்றேன்.
அப்போது அங்கிருந்த ரூபாவை பிடித்து எனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். அவர் மறுத்து சத்தம் எழுப்ப முயன்றார். அவரது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் வைத்து மிரட்டினேன். அவர் தட்டிவிட்டு வெளியே ஓட முயன்றார். மேலும் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிடுவதாக கூறினார். அப்போது அவர் கால் இடறி வளாகப்பகுதியில் கீழே விழுந்தார். அவரது வயிற்றின் மேல் அமர்ந்து கொண்டு மீண்டும் மிரட்டினேன். அப்போதும் அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்து மற்றும் உடலில் பலமாக குத்தி கொலை செய்தேன். ரூபா பயன்படுத்திய செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றேன்.
அதில் இருந்த சிம்கார்டை உடைத்து நொறுக்கினேன். கத்தியை பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றேன். ரூபாவின் செல்போனை பேட்டரியை கழற்றிவிட்டு எனது வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைத்தேன். எந்த வித பதற்றமும் இல்லாமல் மறுநாள் அலுவலகம் வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்மீது சந்தேகப்பட்டு விசாரணைக்கு வந்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ரூபாவின் செல்போன் சிக்கியதால் போலீசார் என்னிடம் துருவி, துருவி விசாரித்தனர். இதில் நான் ரூபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில மாரியப்பன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான மாரியப்பனை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்