நிர்மலாதேவி விவகாரத்தில் புதிய திருப்பம் அரசு ஒப்பந்தங்களிலும் முறைகேடு?
4/23/2018 3:47:02 PM
விருதுநகர்: மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, கணவருக்காக அதிகாரிகளின் துணையுடன் அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் 3 பேர், தஞ்சை பேராசிரியை உட்பட பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டில், 7 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் நேற்று முன்தினம் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், பென் டிரைவ், லேப்டாப், கம்ப்யூட்டர், சிடிக்கள் மற்றும் 3 பை நிறைய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் நிர்மலா தேவியின் கணவர் மற்றும் அவரது மாமனார் பாண்டியனிடம் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் நிர்மலாதேவியிடம் நேற்று 3வது நாளாக விசாரணையை தொடர்ந்தனர். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அந்த ஆவணங்களில், அரசின் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. நிர்மலா தேவியின் கணவர் சரவணபாண்டியன், அரசு ஒப்பந்ததாரர் என்பதால், அவருக்கு ஒப்பந்தங்களை பெற்றுத் தருவதில் இந்த அதிகாரிகள் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று காலை 3 ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அரசு ஒப்பந்தங்களை பெறுவதிலும், பின்னர் ஒப்பந்தப் பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனிடையே நிர்மலாதேவி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பை, நேற்று சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன. மாணவிகளுடனான ஆடியோ உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியானதுமே, லேப்டாப்பில் இருந்த முக்கிய தகவல்களை நிர்மலா தேவி அழித்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது. அழிக்கப்பட்ட தகவல்களை ‘ரெகவரி சாப்ட்வேர்’ மூலம் மீட்டு எடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த தகவல்கள் சிக்கினால், இந்த வழக்கில் வலுவான ஆதாரங்களாக இருக்கும் என்பதால், கம்ப்யூட்டர் நிபுணர்களின் உதவியை கேட்டுப் பெற சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நிர்மலாதேவியுடன் செல்போனில் தொடர்பில் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி இயக்குநர் கலைச்செல்வன், அவருடன் புத்தாக்க பயிற்சியில் கலந்துகொண்ட தஞ்சாவூரை சேர்ந்த ராஜம் உள்ளிட்ட சிலரை, நேற்று விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதிலும் பல புதிய திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிர்மலாதேவிக்கு உடந்தையாக செயல்பட்டதாக, மதுரை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க எஸ்.பி ராஜேஸ்வரி உத்தரவின் பேரில், 4 சிபிசிஐடி போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மதுரை, அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
விவாகரத்து கோரி 2ம் முறையாக கணவர் மனு: கருத்து வேறுபாடு காரணமாக ஏற்கனவே கடந்த 3 மாதங்களாக நிர்மலா தேவியும், அவரது கணவர் சரவண பாண்டியனும் பிரிந்து வாழ்கின்றனர். ஒருமுறை சரவண பாண்டியன், நிர்மலா தேவியின் நடத்தை பிடிக்காமல், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, ‘எனது தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்வேன்’ என்று நிர்மலா தேவி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது விவாகரத்து மனுவை சரவணபாண்டியன் வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் நிர்மலா தேவியின் சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகத் துவங்கியதுமே, அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் 2ம் முறையாக மீண்டும் விவாகரத்து கோரி, சரவண பாண்டியன் மனு செய்துள்ளார்.