கேரளாவில் தலித் அமைப்புகள் பந்த் மறியல்-பஸ்கள் மீது கல்வீச்சு 100க்கும் மேற்பட்டோர் கைது
4/9/2025 4:34:49 PM
திருவனந்தபுரம்: தலித் வன்கொடுமை சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, தலித் அமைப்புகள் ‘பாரத் பந்த்’ நடத்தின. அப்போது உபி உள்பட பல்வேறு மாநிலங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதற்கிடையே துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை கோரியும், பலியானவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க கோரியும் கேரளாவில் பல்வேறு தலித் அமைப்புகள் இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம் எர்ணாகுளம் உள்பட பல இடங்களில் தலித் அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக தம்பானூர் பஸ் நிலையம் முன்பு தலித் அமைப்புகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனிடையே ஆலப்புழா, கொல்லம் சாஸ்தாம்கோட்டை ஆகிய இடங்களில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கொச்சியில் பஸ் மறியல் நடத்திய ஆதிவாசி கோத்ர மகா சபை தலைவர் கீதானந்தன் உள்பட 25 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபால் திருவனந்தபுரம், கொல்லம் உள்பட பல்வேறு இடங்களில் பந்த் நடத்திய தலித் அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பந்த் எதிரொலியாக கேரள கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பல்கலை கழகங்களில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இன்று காலை முதல் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட அனைத்து இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. ஆட்டோ, டாக்சிகளும் பெரும்பாலான பகுதிகளில் இயக்கப்பட்டன. அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் பல வழக்கம் போல் செயல்பட்டன. திருவனந்தபுரம், கொல்லம் கோழிக் கோடு உள்பட பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இந்த பந்த்தால் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் களியக்காவிளை வரை சென்று விட்டு திரும்பின. ஆனால் கேரளா பஸ்கள் இன்று அதிகாலை வேைளயில் குமரி மாவட்டம் வந்தது. அதன்பிறகு எந்த பஸ்சும் வரவில்லை.