ஜாதி, மத நல்லிணக்கம் வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று காங். உண்ணாவிரதம்: டெல்லியில் ராகுல் பங்கேற்பு
4/9/2025 4:31:40 PM
புதுடெல்லி: வன்கொடுமை சட்டம் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து, நல்லிணக்கம் வலியுறுத்தியும், சாதி, மத மோதலுக்கு காரணமான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் ராஜ்காட்டில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பாகம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றம் நடைபெற்ற 23 நாட்களிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடைபெறவில்லை. கடும் அமளிக்கிடையில் பட்ஜெட்டுக்கு மட்டும ்குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதே போல் மாநிலங்களவையில் பணிக்கொடை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் எழுத்துமூலம் அளித்த பதில் மட்டும் பதிவு செய்யப்பட்டது. இது தவிர வேறு எந்த விவாதமும் நடைபெறவில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி விவகாரத்தை எழுப்பி அவையில ்முதன் முதலாக காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் அமளியில் ஈடுபட்டன.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ெதலுங்கு தேசம் , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. காவிரி மேலாண் அமைக்க வலியுறுத்தி மக்களவையில் அதிமுகவும், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுகவும் கோஷம் எழுப்பின. கடைசி நாட்களில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் செய்த மாற்றத்தை கண்டித்து சமாஜ்வாடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சி உறுப்பினர்களை சமாதானம் செய்ய ஆளும் பாஜ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக வீணானதற்கு காங்கிரஸ் தான் காரணம் என பாஜ குற்றம் சாட்டியது.
இதைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் இறந்தனர். இதைக் கண்டித்தும், ஜாதி மத நல்லிணக்கம் வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி டெல்லியில் காந்தி சமாதி உள்ள ராஜ்காட்டில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதேபால் பிற மாநிலங்களில் தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த உண்ணாவிரதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார்.