நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
4/3/2025 3:42:38 PM
புதுடெல்லி: நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற எம்பிக்கள் நிலைக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ‘இந்தியாவின் பேரழிவைக் காக்க தயாராக இருத்தல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நதிகள் இணைப்பின் முக்கியத்துவம் குறித்து அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பெரும்பாலான திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குறிப்பாக நதிகள் இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். இப்பணியில் பிரதமர் அலுவலகத்துக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளம் காரணமாக 456.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆண்டுதோறும் பாதிக்கப்படும் 72.25 ஹெக்டேரில், பயிர்கள் நாசமடைந்த நிலத்தின் அளவு 37.89 ஹெக்டேர். இத்துடன் லட்சக்கணக்கான விவசாயிகளும் வெள்ளத்தில் சிக்கி பலியாகின்றனர். நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்களில் 4,728 நீர்தேக்கங்கள் உள்ளன. கடந்த 2002-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி நதிகள் இணைப்புக்கான மொத்த செலவு ரூ.5,60,000 கோடி ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஜெனரல் மற்றும் தலைமைப் பொறியாளராக பதவி வகித்த சர்.ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர், கங்கை நதியுடன் காவிரியை இணைக்க வேண்டும் என முதன்முறையாக தெரிவித்தார். இந்த யோசனை அப்போது கப்பல் போக்குவரத்துக்காக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.