ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 51வது நாளாக பேராட்டம் தூத்துக்குடியில் ஐடிஐ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
4/3/2025 3:40:12 PM
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 51வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் இன்று தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தனியார் ஐடிஐ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்க திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 51வது நாளாக நீடிக்கிறது.இந்த போராட்டத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக தலைவர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், சமக தலைவர் சரத்குமார், பாமக தலைவர் ஜி.கே. மணி, தமாகா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, சீமான், ஆம்ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கிராம மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.தூத்துக்குடி வஉசி கல்லூரி, காமராஜ் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிகளுக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.குமரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்டம் அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்றுமுன்தினம் மாலை போராட்டத்தை தொடங்கினர். அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு வடக்கு சங்கரபேரி கிராம மக்கள் அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு திரண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.தூத்துக்குடியில் ஸ்பிக்நகர் அருகே அபிராமி நகரில் உள்ள தனியார் ஐடிஐ நிறுவன மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி இன்று ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஐடிஐ நுழைவுவாயிலில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டனர்.இதற்கிடையே தொடர்ந்து போராடி வரும் குமரெட்டியார்புரம் மக்கள் மீது வழக்கு தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக போராட்டக்குழுவினர் ரகசிய ஆலோசனை செய்து வருகின்றனர்.