ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போல் தொடர் போராட்டம் நடந்தாலே காவிரி மேலாண் வாரியம் அமையும்
4/3/2025 3:39:46 PM
மன்னார்குடி: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் கூறியதாவது:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோசடி மோடி அரசை கண்டித்தும், உடன் அமைக்க வலியுறுத்தியும் இன்று வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தார். அதனை பின்பற்றி காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் சாலை, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என 1 கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பங்கேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை முடக்கும் மோடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்த விவாதத்தில் தலைமை நீதிபதியின் கருத்து சந்தேகமளிப்பதாக உள்ளது. ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடுகள் உள்ளதாக நீதிபதிகளே போர்க்கொடி தூக்கிய நிலையில் தலைமை நீதிபதி கருத்து அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். வரும் 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் வலிமையான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுவர். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.