ெடல்லியில் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
4/3/2025 3:23:57 PM
புதுடெல்லி: மத்தியில் பாஜ மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இறங்கியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள அவர் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து எதிர்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க ஆளும் பாஜ கூட்டணியும், எதிர்கட்சிகளும் இப்போதே முனைப்பு காட்டி வருகின்றன. பாஜ கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களுக்கு அவர் கடந்த மாதம் விருந்து வைத்தார். இதை ெதாடர்ந்து சரத்பவாரும் எதிர்கட்சி தலைவர்களுக்கு விருந்தளித்தார். பாஜ கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது. ஏற்கனவே சிவசேனா பாஜவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால் புதிய கட்சியை பாஜவில் இணைக்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையில் பாஜ, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக புதிதாக மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் விதமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். பின்னர் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்தார்.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் தனது பங்கிற்கு மூன்றாவது அணியை உருவாக்கும் முனைப்பில் இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். இன்று காலை தனது தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்களை சந்தித்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வலியுறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பின்னர் சரத்பவார், உள்ளிட்டோரை சந்திக்கிறார். இருப்பினும் காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்கும் திட்டம் இல்லை என கூறப்படுகிறது.