ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம்
4/3/2025 3:22:27 PM
புதுடெல்லி: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் அமிர்தசரஸ் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈராக்கில் உயிரிழந்த 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் வி.கே.சிங், இது ஏதோ பிஸ்கட்களை விநியோகிப்பது போன்றதல்ல, இது மனிதர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. புரிந்து கொள்ளுங்கள். நான் எப்படி இப்போது அறிவிக்க முடியும்? என்னுடைய பாக்கெட்டில் ஒன்றுமில்லை” என்றார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை அளிக்கப்படுமா என கேட்ட போது, “இது ஒன்றும் கால்பந்தாட்டமல்ல” என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பொறுப்பற்ற பதிலால் அங்கிருந்தவர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர். அமைச்சர் வி.கே.சிங்கும் மிகவும் பதற்றமாக இருந்தார். அவரை பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் பாஜக பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அமைதிப்படுத்த முயன்றார்.
மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் இத்தகைய பதில்கள் எதிர்க்கட்சியினரிடம் தவறான சிக்னல்களை அளித்துள்ளது, சமூக வலைத்தளங்களில் அவர்கள் வி.கே.சிங்கைச் சாடி வருகின்றனர். அரியானா காங். எம்எல்ஏ ரந்தீப் சிங் சுஜ்ரேவாலா கூறுகையில், 39 இந்தியர்கள் மொசூலில் கொல்லப்பட்டனர். மோடி அரசு தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரையும் தேசத்தையும் தவறாக வழிநடத்துகிறது. அமைச்சர் வி.கே.சிங் இப்போது வெந்த புண்ணில் உப்பைத் தடவுகிறார். நிவாரணம் என்னவென்று கேட்டால் பிஸ்கட் என்று கேவலப்படுத்துகிறார். இருதயமற்றவர், வெட்கக்கேடு என கூறியுள்ளார்.திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த டெரிக் ஒ பிரைன் கூறுகையில், உணர்ச்சியற்றவர், கால்பந்து, பிஸ்கட்டுகள்.. 39 பேர் உயிருக்கு பயன்படுத்தும் முறையற்ற சொற்கள், என்று சாடியுள்ளார்.