தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி
4/3/2025 3:21:08 PM
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும், ‘‘அன்றைய தினம் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. காலை 6 மணி முதல் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்ைட, பிராட்வே உள்ளிட்ட இடங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல, சென்னையில் பல இடங்களில் சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை மூடப்பட்டிருந்தது. சில இடங்களில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதே போல, மாநிலத்தின் பல இடங்களில் கடையடைப்பு போராட்டம் வெற்றிக்கரமாக நடைபெற்று வருகிறது. ஓட்டல்கள் திறக்கப்படாததால் வேலை தேடி வெளியூர் வந்தவர்கள், பேச்சலர்ஸ் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்ட காட்சியை காண முடிந்தது. திறந்திருந்த சில இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.கண்டன ஆர்ப்பாட்டம்வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மோடி தமிழகம் வரும் 11ம் தேதி மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.5ம் தேதி மளிகை கடைகள் அடைப்புகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் வருகிற 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மளிகை கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் தெரிவித்துள்ளார்.