தமிழகம் முழுவதும் தீவிரமடைந்தது காவிரி போராட்டம் முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம்
4/3/2025 3:19:10 PM
சென்னை: காவிரி மேலாண்ைம வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் திடீரென கலந்து கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் அமைச்சர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். திமுக 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வணிக சங்கங்கள் கடைய டைப்பிலும், விவசாய சங்கங் கள் ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்ட னர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 6 வாரம் கெடு விதித்திருந்தது. இந்த காலக் கெடு கடந்த 29ம் தேதி முடிவடைந்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையே, கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கூட மதிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், சுங்க சாவடிகளை அடித்து நொறுக்குவது உள்ளிட்ட போராட்டங்களில் குதித்துள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடந்த வாரம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக் கோரியும், காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட கோரியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை காத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 3ம்தேதி (இன்று) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் 32 மாவட்ட தலைநகரங்களில் மாநெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
ஆனால் மத்திய அரசை கண்டித்து நடத்தும் இந்த போராட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் முதலவர், துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் காலை 8மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையிலும், சென்னை மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தென்சென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆர்.எஸ்.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சரியாக காலை 8 மணி முதல் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வர தொடங்கினர். இந்நிலையில், சரியாக காலை 8.05 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், காலை 8.10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திடீரென உண்ணாவிரத பந்தலில் வந்து அமர்ந்தனர். இவர்கள் இருவரும் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்மாட்டார்கள் என்று இன்று காலை வரை செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கினாலும், மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களோ முன்னணி நிர்வாகிகளோ யாரும் பேசவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து எந்தவித கருத்துகளை தெரிவிக்காமல் அப்படியே மவுனமாக மேடையில் அமரந்திருந்தனர்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தொண்டர்களுக்கு மேடையில் இருந்தபடி வணக்கம் கூறியபடி இருந்தனர். ஆனால் எதுவும் பேசவில்லை. சென்னையில் காலை 8மணிக்கு போராட்டம் தொடங்கிய போது அதிமுக தொண்டர்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. ஆனால் 8 மணிக்கு மேல் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றதை கேள்விப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு குவிந்தனர். இவர்களை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட போலீசாரும் உண்ணாவிரத பந்தல் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றதால் அரசு அதிகாரிகளும் உண்ணாவிரத பந்தலில் இருந்தனர். அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால் சேப்பாக்கம் சாலைகளில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. உண்ணாவிரதம் முடிவடையும் போது மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் காவிரி பிரச்னை குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூரில் அமைச்சர் பெஞ்சமினும், ஈரோட்டில் செங்கோட்டையன், கருப்பண்ணன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், நாமக்கல்லில் தங்கமணி, கோவையில் வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர், திண்டுக்கல்லில் சீனிவாசன், தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ, நெல்லையில் ராஜலட்சுமி என்று தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் அமைச்சர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். புதுவை, காரைக்காலிலும் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.கடந்த 1ம் தேதி முதல் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இரண்டாவது நாளான நேற்று தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் திமுகவினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர் பஸ் நிலையம் அருகில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். தேனாம்பேட்டை சிக்னல் அருகில் நடந்த மறியலில் ஜெ.அன்பழகன், கு.க.செல்வம் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
சென்னை ஓட்டேரி பாலம் அருகில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மடிப்பாக்கம் கூட் ரோடு சந்திப்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.ெசன்னை வடக்கு மாவட்டம் சார்பில் புழல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிரம் தெற்கு மாவட்டம் சார்பில் வாலாஜாபாத் நகரில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆவடி பழைய நகராட்சி முன்பு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதே போல மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தை இன்று காலை முற்றுகையிட முயன்ற டிடிவி தினகரன் மற்றும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். திருச்சி தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் முன்பும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழகத்தில் இன்று அனைத்து கட்சிகள் சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.