பாஜ என்றாலே மோடியும் அமித்ஷாவும்தான் மூத்த தலைவர்களுக்கு பாஜவில் மரியாதை இல்லை: சத்ருகன் சின்ஹா
4/2/2025 2:46:35 PM
புதுடெல்லி: பாஜக என்றாலே மோடியும் அமித்ஷாவும்தான், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு பாஜகவில் எந்த வித மரியாதையும் இல்லை என்று நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும் நடிகருமான இவர் அடிக்கடி அவரது சொந்தக் கட்சியான பாஜகவினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். இதனால் இவரை பாஜக அதிருப்தி எம்பி ஆகிவிட்டார். தற்போது பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை பாஜக என்றாலே மோடியும் அமித்ஷாவும் என்கிற அடையாளம் ஆகிப் போச்சு என பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2 எம்பிக்கள் மட்டுமே இருந்த பாஜக கட்சியினை பாடுபட்டு உழைத்து மக்களிடம் கட்சியினை கொண்டு சென்று இன்று பாஜகவிற்கு 270 எம்பிக்கள் கொண்ட மாபெரும் கட்சியாக மாற்றியவர் அத்வானிதான்.
மூத்த அரசியல்வாதியான அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் என எந்த ஒரு பதவியை வழங்காதது மட்டுமல்ல, அவருக்கு பாஜ ஆட்சியில் கடந்த 4 ஆண்டுன்களில் ஒரு பத்ம விருது கூட அவருக்கு வழங்கப்படவில்லை. இவர் மட்டுமல்ல பல தலைவர்களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்திய அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த செயல் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் பெரிய பாதிப்பையும் ஏமாற்றத்தினையும் உண்டாக்கியுள்ளது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் வேறொரு கட்சி சார்பில் நான் வேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திய போது வர்த்தகர்கள், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாஜ அரசு இப்படி செயல்பட்டு மக்களிடம் கட்சிக்கு கெட்ட பெயர் சம்பாரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பாஜக பலத்த அடியை வாங்கும் என இவர் ஏற்கனவே கூறியது பாஜவில் பலத்த சர்ச்சையை உண்டாக்கியது.